திருவனந்தபுரம்: உலகை உலுக்கும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாடெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சிகிச்சைக்கு ஆகும் செலவு விவரங்கள் குறித்து, கேரள சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
ஒரு கொரோனா நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு, 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. கொரோனாவால், தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, ஐ.சி.யூ., வார்டில் சிகிச்சையளிக்க நேர்ந்தால், வென்டிலேட்டர் செலவு கூடுதலாகும். அப்படியான நோயாளிக்கு, ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வரை அரசு செலவு செய்து வருகிறது.
* கொரோனா டெஸ்ட் செய்து, நோயை உறுதிப்படுத்த, ரூ.4,500 செலவாகிறது. டெஸ்ட் கிட்டின் விலை ரூ.3,000.
* நோய் உறுதி செய்யப்பட்ட ஒருவருக்கு, தினமும் ரூ.1,000 மதிப்புள்ள ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படுகின்றன.
* கொரோனா நோயாளி வென்டிலேட்டர் வசதியுடன் ஐ.சி.யூ., வார்டுக்கு மாற்றப்பட்டால், நாள் ஒன்றுக்கு 20,000 முதல் 25,000 வரை கூடுதலாக செலவாகிறது.